27.2.17

வெளியில் துடிக்குமா இதயம்..?

ஆண்: இருதயம் முதன்முறை வெளியிலே துடிக்குதே
இறக்கைகள் முளைக்குதே.. இமயம் கடக்குதே..

பெண்: இருவிழி பசிக்குதே.. இமைவழி புசிக்குதே..
இடைவெளி குறையுதே.. இலகுவாகுதே..

ஆண்: காந்தள் பூப் போல வந்து - நீ
காதல் நரம்புகளை மீட்ட

பெண்: அணுவின் நேர்மின்னி யாவும் - உன்
பெயரையே எழுதிக் காட்ட

ஆண்: இது தான் காதல் என்பதா..
இளமை இனிமை ஆனதா..
இரவும் பகலும் மாறுதா..
இசைகிறதா..


சரணம் 1

ஆண்: கோடி மின்னல் பார்வை ஒன்றில் பாய
கோபுரங்கள் உன் சிரிப்பில் சாய
கன்னி பூச்செடி.. நீ கூதல் காற்றடி..

பெண்: மாய வலைகள் என்னைச் சுற்றி வேய
மனது முழுதும் உன்னைப் பற்றி ஆய
என்னை கைப்பிடி.. பின் நானுன் சேவடி..

ஆண்: கோலார் சுரங்கம் ஒன்று கோதை ஆனதென்ன
பாலார் படுகை போலே மனம் பாழாய் போனதென்ன

பெண்: புன்னகை பூவிதழ் உன் புத்தகம் ஆனதோ

ஆண்: பக்கங்கள் புரட்டினால் புது சொர்க்கங்கள் சேருமோ


சரணம் 2

ஆண்: வானவில்லில் கருமை வண்ணம் எங்கே
வஞ்சிப் பெண்ணில் புருவம் ஆனதிங்கே
மின்னல் கூர் விழி.. எனை ஈர்க்கும் கருங்குழி..

பெண்: தேகம் எங்கும் தீண்டும் தென்றல் எங்கே
தேடி மேயும் கைகள் ஆனதிங்கே
பேசும் மார்கழி.. நீ காதல் பெருவழி..

ஆண்: கடலில் சேரும் நதியாய் காலம் போனதன்று
தரிசாய் கிடந்த யாவும் தளிராய் மாறுதின்று

பெண்: மழையாய் மாறவா.. உன் புஞ்சை தூரவா..

ஆண்: பிழைகள் தீர்க்கவா.. எனை முழுதாய் ஆக்கவா..


"ஒவ்வொரு நண்பனும் தேவை மச்சான்" திரைப்படத்துக்காக, மெட்டுக்கு எழுதிய பாட்டு.